காலை மன்றாட்டு (தமிழ் கவிதை)

அதிகாலை நான் எழுகிறேன்
அற்புதம் இதுவும் அற்புதம்
துதிகளை உமக்குச் செலுத்தியே
தொடங்குவேன் இந்த நாளினை
வைகறையில் உமதுப் பேரன்பால்
வைத்திட்டீர் எனைப் புதுநாளில்
அகவையில் நாளொன்று சேர்த்தீர்
அதனை ஆசீரளித்துக் கொடுத்தீர்
இறைவா இந்நாளுக்காய் நன்றி!
இன்று உம்மோடு ஒன்றி
நிறைவாய் உமதன்பில் ஊன்றி
நிரம்ப வேண்டும் நின்னருளால்
கடந்தகால கவலைகள் யாவும்
கலைந்துப் போகும் கனவாய்
படர்ந்தபல பயங்கள் யாவும்
பறந்துப் போகும் பதறாய்
விடியலில் கதிரவன் ஒளியும்
விரட்டும் இருட்டு இருளையும்
அடியவன் மனதின் இருளை
அகற்றும் உம்திருமுக ஒளியால்
இத்தினம் முழுதும் என்னை
இன்புற்று இருக்கச் செய்தருளும்
காத்திடும் இந்நாளில் என்னை
கருணை அன்பு அமைதியுடன்
உள்ளத்தில் வஞ்சமோ எந்தன்
உதட்டினில் நஞ்சோ இன்றி
கள்ளம் கபாடின்றி என்னை
கருத்தாய் இன்று வழிநடத்தும்
ஆணவம் செருக்கு யாவும்
அழியட்டும் என்னை விட்டு
அணையட்டும் சினத்தீ சகிப்பினால்
அமைதிக் கொள்ள அருள்வீராக
இன்றைய நாள்முழுதும் என்னோடு
இருந்து எனைவழி நடத்தும்
இன்னும் என்னைநீர் ஆசீர்வதித்து
இருக்கும் எல்லையை பெரிதாக்கும்
செய்யும் செயலில் உம்கரத்தால்
செயல்கள் யாவும் துலங்கசெய்யும்
மெய்யும் மதியும் சுகப்படுத்தும்
மேன்மையாய் எனைக் கனப்படுத்தும்
வேதனை என்னிடம் விலக்கிடும்
வாதை தூரமே துரத்திடும்
சோதனை எதிலும் தாங்கிடும்
சாதனை என்னுள் செய்திடும்
இத்தினம் என்னை ஒப்படைத்தேன்
இனிதே என்னை ஏற்றிடுவீர்
எத்திசையும் உம்புகழ் பரப்ப
என்னை உந்தன் கருவியாக்கும்
மகிழ்ந்து இன்றுக் களிப்புறுவேன்
மகிமையில் வெற்றி எனக்களிப்பீர்
நெகிழ்ந்து நானும் சரணடைவேன்
நேசர் உந்தன் பாதத்தையே